நம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், நேர்மை தவறாத நெஞ்சுறுதிமிக்கவர் தோழர் ரவிக்குமார். தன்னையோ, தனது பிற அடையாளங்களையோ முன்னிறுத்தி, உள்நோக்கத்தோடு எந்த ஒன்றின் மீதும் அவர் தனது கருத்துகளை முன்வைப்பதில்லை. தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளும் நலன்களுமே அவரது செயற்பாட்டுக்கான களமாகும். புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளும் போராட்டங்களுமே அவரது செயல்வீரியத்துக்கான அடியுரமாகும். *இத்தொகுப்பில் ரவிக்குமார், தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிறார். குறிப்பாக, இந்த மண்ணில் திட்டமிட்டே விதைக்கப்பட்டுவரும் வகுப்புவாதவெறியை அல்லது சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான வெறுப்பை, ஆதாயநோக்கிலான பிற்போக்கு அரசியலைத் தோலுரிக்கிறார். 2019-இல் பாரதிய சனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் சிதைத்து, சமூகநீதியை, சனநாயகத்தை, சமத்துவத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் என்று மதச் சார்பற்ற - சனநாயக - முற்போக்கு சக்திகளை எச்சரிக்கிறார்!
- எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி