திருநெல்வேலியில் இருந்து மற்றுமொரு எழுத்தாளர் மு. வெங்கடேஷ். இவருடைய சிறுகதைத் தொகுப்பு “கொரங்கி” என்ற தலைப்பில் ஜீவா படைப்பகம் வெளியீட்டு உள்ளது. இந்த சிறுகதைகள் அறிமுகப்படுத்தும் பெரும்பான்மை கதாபாத்திரங்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்து இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே நாம் வாசிக்கும் பொது உணர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை. அக்கா தம்பி உறவை அதிக கதைகள் பேசுகிறது. புத்தகத்தின் தலைப்பே அங்கு இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்கிறது. வறுமையும், சிறுமையும் தாக்கும்போது எல்லாம் தம்பியை காக்கும் அக்கா நம் கண்களில் கண்ணீர் வரவைக்கும் கதாபாத்திரமாகவே இருக்கிறாள். பட்டறை என்னும் கதையில் வரும் காந்தி ஆசாரி மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறார்.
ஒரு காலத்தில் ஊர் மெச்ச வாழ்ந்தவர் இன்று குடிசையில் வந்தாலும் அவர் இந்த வாழ்க்கையின் மீது கொண்ட அப்பிராயம். அவர் அதை விவரிக்கும் வார்த்தைகள் இந்த தலைமுறை கற்று கொள்ள வேண்டியவையாகும்.
ஒரே நேரத்தில் தந்தையும் தமையனும் என நகரும் காலமும் கதையும் உறவுகளை அணுகும் முறையில் உள்ள நடைமுறை சிக்கலின் சான்று. இவற்றுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது. மேலும் அன்றாட நடைமுறையில் இருந்து நுட்பமாக பல விசயங்களை இயல்பான நெல்லை பேச்சு தமிழால் பேச முயல்கிறது இந்த கதைகள்.