நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில்,பல்வேறு காலங்களில்,நில உடைமையாளர்,லேவாதேவிக்காரர்,மதகுருமார்,ஆட்சியாளர் ஆகியோரின் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளான ஏழை மக்கள் அவர்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்திருக்கின்றனர்.இந்தக் கிளர்ச்சிகள் ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டுவிட்டாலும் இவை முற்றிலும் வீணாகி விட்டதாகக் கூற இயலாது.ஏனெனில்,இவை பொது மக்களிடையே தோற்றுவித்த விழிப்புணர்வு பிற்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உந்து சக்தியாகச் செயற்பட்டது.
இத்தகைய எழுச்சிகளில் ஒன்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சோட்டா நாக்பூர்ப் பகுதியில் பீர்ஸா முண்டாவின் தலைமையில் நடைபெற்ற முண்டாக் கலகமாகும்.இந்த நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு புனையப்பட்ட இந்த நாவலில் முண்டா இனத்தாரின் வரலாறு,அவர்களது சமூக அமைப்பு,நம்பிக்கைகள்,பழக்க வழக்கங்கள்,அவர்களது கிளர்ச்சிக்கான காரணங்கள் ஆகியவை வரலாற்று உண்மைக்கு மாறுபடாமல் சித்தரிக்கப்பட்டுள்ளன.அதே சமயத்தில்,நாவல் என்ற இலக்கிய உருவத்துக்கு இன்றியமையாத முருகியல் தன்மை சற்றும் சிதையாமல் இடம் பெற்றிருப்பது இந்த நூலின் சிறப்பு.இந்த நாவல் சாகித்திய அகாதெமியின் விருது பெற்றதாகும்.