கலாம் கனவு நாயகன்
தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் முதல் குடிமகனாக உயர முடியும், நாட்டின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும், இளைஞர்களால் புத்தம் புது இந்தியாவை கட்டமைக்க முடியும், ‘கனவு காணுங்கள்’ உங்களால் முடியும் - என நம்பிக்கை விதைத்த அப்துல் கலாம் விதைக்கப்பட்டுவிட்டார். ‘கனவு காணுங்கள்’ என்ற அக்னி வார்த்தைகள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்தத் தூண்டியவர் கலாம். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதைத் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதால்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்று நம் மனதில் அரியணை போட்டுத் தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார். ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி வறுமையான மீனவக் குடும்பத்தில் பிறந்த கலாமின் கனவுகள் எல்லாமே வளமானவை. அவைதான், பல மைல் தூரம் நடந்து கல்வி கற்கும் உத்வேகத்தை அவருக்குத் தந்தது. சிறுவனாக இருந்தபோது பகுதி நேரமாக செய்தித்தாள் விநியோகிப்பதில் தொடங்கி எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி, பொக்ரான் பாலைவனத்தில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை என ஒவ்வொரு நாளும் தனது உயர்வுக்காக என மட்டும் இல்லாமல், தேசத்தின் உயர்வுக்காகவும் கனவு கண்டு ஓடியவர் கலாம். அப்துல் கலாமின் இளமை தொடங்கி, அவரது உழைப்பு, சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு எல்லாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பால பாடங்கள். ‘விகடன் மேடை’யில் வாசகர்களுக்கு அளித்த பதில்கள், சுட்டிகளுடன் கலந்துரையாடல், மாணவர்களுடன் ஓர் ஆசைச் சந்திப்பு என விகடனில் வெளிவந்த அத்தனை பொக்கிஷங்களையும் ஒரு தொகுப்பாக படங்களுடன் அள்ளி வந்திருக்கிறது இந்தப் புத்தகம். ‘தோல்விகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். வெற்றிக்கான மிக முக்கியமான திறமை அதுதான்’, ‘நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்’ என கலாம் நமக்குச் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களும் நம் வாழ்வை வளமாக்குபவை. அறிவியல் ஞானி, குடியரசுத் தலைவர் என உயரே உயரே சென்றபோதும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களோடு இருக்கும் நேரத்தை உருவாக்கிக் கொண்டவர் கலாம். சுட்டி விகடன் மூலம் மாணவர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில், ‘விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர்... இவற்றில் உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?’ என ஒரு மாணவர் கேட்டபோது, ‘ஆசிரியர்’ என அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்னார். இந்தப் புத்தகத்திலும் பக்கத்துக்குப் பக்கம் அவர் பேசியது, சொன்னது அனைத்துமே நமக்கு ஒரு பாடம் என்றால் அது மிகையாகாது. வாருங்கள்! பக்கத்தைப் புரட்டி பாடம் கற்போம்!