அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை. அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது? "நீ யார்?" என்று போலீஸ் கேட்டால் என்ன பதில் சொல்வது? எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. இது ஒரு திரைமறைவுத் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் "விபச்சார அழகி கைது" என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். கோர்ட்டில் நிறுத்தி ஃபைன் கட்டச் சொல்லுவார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள்.
உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. "என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது. இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கிவிடுகிறார். இந்நூலைப் படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை, இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது.