விதை என்பது அது முலைத்த நிலத்தில் மட்டும் தான் காய்த்துக் கனியாகி, உதிர வேண்டும் என்பதில்லையே. அவை சுவைமிகு கனிளாக அடுத்தவர் தோட்டங்களுகு வெவேறு காலகட்டங்களில் வித விதமான காரணம்க்களால் பயன்படவும் செய்திருக்கலாம். ஆனால், எங்கே சென்றாலும் சுவைமிகு வெற்றிக்கனிகளாக விகடன் விதைகள் என்றுமே மறந்ததில்லை. விளைநிலத்தின் வீர்யம் அப்படி.
புத்தகம் முழுதும் படித்த போது, கருணா எத்தனை தூரம் எல்லாச் சம்பவங்களையும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார் என பிரமித்துப் போனேன் . தன் பத்திரிக்கைத் தொழிலின் ஒவ்வொரு கட்டத்தையும் புத்தகம் நெடுக்க அத்தனை அழகாய் விவரித்திருக்கிறார். அது, அவர் சொதப்பிய இடமாக இருந்தாலும் சரி.... செதுக்கிய கல்வெட்டாக இருந்தாலும் சரி.... நடந்த உண்மைகளை .... கடந்து வந்த வலிகளை.... பெற்ற பாராட்டுகளை... வழிமறித்த அவமானங்களை.... துரத்திய துரோகங்களை.... என எதையும் மாற்றாமல், ஹீரோயிசமே ஏற்றாமல் ரியாலிசமாக தந்திருப்பது சிறப்பு. இதுவே ஒரு சாகசம்தான். இதற்க்கு ஒரு தைரியம் வேண்டும்.
செய்யும் தொழிலுக்கு உண்மையாய் இருந்து, வெவ்வேறு பத்திரிக்கையுலக பிரம்மாக்களிடம் கற்ற வித்தைகளையும் கூடுதல் அனுபவங்களாக பெற்று ஜொலித்த தன்னால், தனது சொந்த வாழ்வில் அத்தனை முழுமையாய்க் கடமையாற்ற முடியவில்லையே எனவும் நிஜமாக ஆதங்கப்பட்டிருக்கிறார், ஆங்காங்கே நானும் இதுபோல் பலமுறை என்னைப் பற்றி எண்ணியிருக்கிறேன்.
சுபா வெங்கட்