கணிதப் பேராசிரியராக விளங்கும் இவர் கணிதத்தை அனைவரும் அச்சமில்லாமல் விரும்பி படிக்கவேண்டும் என்பதற்காகவே ‘பை கணித மன்றம்’ என்ற அறக்கட்டளையை தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு தொடங்கி,அதன் நிறுவனராக விளங்கி வருகிறார்.கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த 200க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுக்க வழங்கியுள்ளார்.மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் பல பயிலரங்கங்களை,கண்காட்சிகளை நடத்தி,பங்கேற்று திறம்பட செயல்பட்டுள்ளார்.இவர் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.இதுவரை ஆறு புத்தகங்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் பை கணித மன்றம் சார்பில் எழுதியுள்ளார்.இவர் எழுதிய ‘எண்களின் எண்ணங்கள்’ என்ற புத்தகம் தமிழக அரசின் சிறந்த அறிவியல் நூல் விருதை வென்றது.கணித மேதை இராமானுஜனின் தொண்டராக விளங்கும் இவெ ‘எண்களின் அன்பர்’-ராமானுஜன் வாழ்வும்,கணிதமும் சார்ந்த மிக விரிவான தமிழ் புத்தகத்தை எழுதியுள்ளார்.இப்புத்தகம் அண்மையில் திருப்பூர் தமிழ்ச் சங்க சிறந்த புத்தக விருதை பெற்றது.மொத்தம் நான்கு விருதுகளை இவர் புத்தகம் வென்றுள்ளன.
‘தி இந்து’, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற புகழ்பெற்ற நாளிதழ்களில் கணித புதிர்களை கடந்த சில ஆண்டுகளாக பை கணித மன்றம் சார்பில் வழங்கி வருகிறார்.மேலும் சென்னை ரிப்போர்ட்,மஞ்சரி,அறிவியல் உலகம்,சுட்டி விகடன் போன்ற இதழ்களுக்கு கணிதம் சார்ந்த தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.பல அறிவியல் அமைப்புகளுக்கு ஆலோசகராக விளங்கி வருகிறார்.கணிதத்தை உயிர் மூச்சாக கருதி என்றென்றும் அதன் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களில் ஒருவராக திகழ்கிறார்.