எழுபதுகளில் உருவாகிய புத்திலக்கியப் படைப்பாளிகளில், வாழ்க்கையோடு கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ள முடியாத மிகச் சிலரில் ஒருவர்,
விக்ரமாதிதுயன். பலவிதமான பணியாளர்களிடம், பலவிதமான பணியிடங்களில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கிற விக்ரமாதித்யன் எல்லா
இடங்களிலும் சந்தித்திருப்பது முரண்பாடுகளும் மோதல்களும் தாம். Master vs Slave என்ற உறவை ஏற்றுக்கொள்ள முடியாமல் எந்த வேலையையும்
உதறி எறிந்துவிட்டு வெளியேற முடிந்திருக்கிறது அவரால், அவரது எதற்கும் கட்டுப்படாத சுதந்திர ஆளுமைதான் எப்பொழுதும் ஜெயித்துக்கொண்டு வருகிறது.
குடும்பச்சூழல், நண்பர்கள் அறிவுரை எதிர்கால பயம் என்ற எதுவும் அவரை மாற்ற முடியவில்லை. நிஜத்தின் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,
எங்கும் நிலையாக இருக்க முடியாத, சதா அலைகிற மனிதனாக இவர் ஆகி இருக்கிறார்.
இந்தியத் துறவிகளின் முக்கிய குணாம்சமான யாத்திரை மூலமான ஆன்மீகத் தேடல் இவரது ஆளுமையின் இன்னொரு முகம். எதிலும் நிறைவு
கொள்ளாத இவரது அமைதியற்ற ஆத்மாவுக்கு இந்தப் பிராயாணங்களும் அலைச்சல்களும் அவ்வப்பொழுது சில தரிசனங்களையும் சாந்தங்களையும்
வழங்கியிருக்கின்றன.