அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லாம் விடாமல் தொகுத்து அவற்றை வல - இட அகரவரிசையில் பிழை இன்றி அமைத்து ஓர் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். வல - இட அகரவரிசை அகராதி என்பது இன்று அகராதித்துறையில் பேசப்படுவதுதான். இன்றைய கணினி யுகத்தில் இத்தகைய அகராதி செய்வது இயலக்கூடியதுதான். 1938ஆம் ஆண்டு இப்படி ஒரு அகராதி வெளிவந்திருக்கிறது என்றால் அந்தத் தனி மனிதர் அயராமல் உழைத்திருக்க வேண்டும்.