‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு.
அண்டவெளியில் ஒரு ‘மூலையில்’ இருக்கின்ற பூமியை மட்டும் இயற்கை விசேஷமாகத் தேர்ந்தெடுத்து
மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கியது என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? இயற்கை
பாரபட்சமற்றது அல்லவா? அப்படியானால் மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்திலும்
இருக்கிறார்களா?
நிச்சயம் இருக்கவேண்டும் என்றே பல விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு
எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால் அங்கும் இதேபோன்று பலவகையான உயிரினங்கள்
இருக்கமுடியும். ஆனால் அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன்
மாதிரியில் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது
ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அவற்றுள் நிச்சயம் பூமி மாதிரி ஒரு கிரகம் இருக்கத்தான்
வேண்டும். வேற்றுலகவாசிகள் வசிக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படியான வேற்றுலகவாசிகளைக்
கண்டுபிடிப்பது எளிதல்ல.
அந்த இன்னொரு பூமி எங்கே? எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கான செயல்பாடுகள், இதுவரையிலான தேடல்
முயற்சிகள், சாத்தியங்கள், சிரமங்கள், மர்மங்கள் அனைத்தையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புத்தம் புதிய
அனுபவத்துக்கு தயாராகுங்கள்!
அனைத்து முன்னணி இதழ்களிலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் ராமதுரை
‘தினமணி சுடர்’ என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். பல அறிவியல்
நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர். அவரது இரு நூல்கள் விருது பெற்றவை. அறிவியல்
எழுத்தாளர் என்ற முறையில் தேசிய விருது பெற்றவர்.