சேகுவாரா 1956 - 58 ஆம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின்போது நாட்குறிப்பில், தினசரி நிகழ்வுகளை எழுதுவது அவரது
வழக்கம். அன்போடு சே என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர், சிறிய மற்றும் ஒரு மருத்துவருக்கே உரிய புரியாத கையெழுத்தில் எழுதுவார்.
தினசரி குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய , மிகச் சரியான, விலைமதிப்பில்லாத
மற்றும் விவரமான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. உண்மையில் புத்தகமாக வெளியிடுவதைக் கருத்தில் கொண்டு எழுத்தப்படாவிட்டாலும்,
அந்தக் குறிப்புகள், நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் மற்றும் மக்கள், இவற்றைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்ய உதவியது. அதே நேரத்தில், சுற்றி நடப்பவற்றைக்
கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்யும், அவ்வப்போது நகைச்சுவையும் கலந்த ஒரு ஆன்மாவின் வெளிப்பாடாக இருந்ததுடன், கடைசிவரை
முறையாகவும் வரிசையாகவும் எழுதப்பட்டது.
ஒரு போராட்டத்தின் நடுவில் எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எழுதப்பட்டவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மிகவும்
கடினமான சூழ்நிலையில், ஒரு கொரில்லாப் படையின் தலைவராக அவர் இருந்த சமயம் அது. இது அவர் வேலை செய்யும் விதத்தையும் அவரது
இரும்பு போன்ற மன உறுதியையும் காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை விவரமாகப் பகுப்பாய்வு செய்தது மட்டுமல்லாமல், அந்த நாட்குறிப்பு, சில குறைபாடுகளையும்,
கடுமையான விமர்சனங்களையும் ஒரு புரட்சிகர கொரில்லாப் போராட்டத்தில் நிகழக்கூடிய எதிர்க் குற்றச்சாட்டுக்களையும் நடுநிலையோடு
பதிவு செய்திருக்கிறது.