நட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடைக்கும் கதையாடல். கடவுளோடு விளியாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைப்பிடித்துக் கூட்டிப்போகும் அழகு.
மனித அழுக்குகள் விலங்குகளின் மீது படியாமல் பார்த்துக்கொள்ளும் கவனம். ஆதிரையின் கதைக்குள் எதுவும் சாத்தியமாகும் அதிசயம். மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைத்தும் அவள் கதைவெளியில் அலைகின்றன.
உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளூக்கும் பொதுவான கதையை அவளால் சொல்ல முடிகிறது. பூமியை ஒவ்வொரு நாளும் தன் கதைகளால் தூய்மைப்படுத்துகிற கதைசொல்லி ஆதிரை. உயிர்களையும் தாண்டி விரியும் பேரன்பு அவள் கதைமொழி.
குழந்தைகளிடம் கதைசொல்ல இந்தப் புத்தகம் உதவும். என் ஆசையும் அதுதான். வாசிப்பில் நீங்கள் உள்வாங்கிய கதைகளை உங்கள் பிள்ளைகளிடம் சொல்லத் தொடங்குங்கள். பிறகு அவர்கள் கதை சொல்லும்போது ஆர்வமாக கேளுங்கள். கொண்டாட்டத்தில் வீடு அதிரும். கந்தசாமியின் கழுத்து மணி ஓசை குழந்தையின் சிரிப்பாக மலரும்.