டாக்டர் ஆர். நடராஜன், தினமலர், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதில் பிரதமருடன் பேட்டி என்ற கட்டுரை துவங்கி, மொத்தம் 80 கட்டுரைகள் உள்ளன.இவை 2012, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. நூலின் துவக்கத்தில் சர்வ வீரிய சர்வாக்ரக, சர்வ வியாபியான இத்தாலிய ஜனன, இந்திய பிரஜா ஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம் என ஆசிரியர் தனி கட்டம் போட்டு குறிப்பிட்டுள்ளார்.அவரது பாணியில் இது தாளிப்பு வர்ணனைகள். அவற்றில் டெல்லி காத்திருக்கிறது என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் எழுதிய கடிதக் கட்டுரை வாசிக்க வேண்டிய ஒன்று.முதல்வர் ஜெ. பிரதமராக முயல வேண்டும் என, ஆசிரியர் சொல்லியிருக்கிறார். பல்வேறு உலக விஷயங்களை பரபரப்பாக எழுதும் ஆசிரியர் 40 எம்.பி. சீட்டுகள் கொண்ட மாநிலத்தை ஆளும் ஒருவர் இந்தியப் பிரதமராவது எப்படி என்றும் எழுதி இருந்தால் அது பெடரல் தத்துவத்தை விளக்கும் அரசியல் கருத்தாக இருந்திருக்கும். அரசியல் ஆர்வம் உள்ளவர்கள், இவரது எழுத்துக்களை ஆர்வமாக படிக்க விரும்புவர்.