செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது.அந்த சித்தாந்தவாதி புத்தராகவோ,கார்ல் மார்க்ஸாகவோ,அம்பேத்காராகவோ அல்லது வேறு யாரேனும் ஒருவராக இருக்கலாம்.நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து! மனிதர்களுக்கு துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுத்தரக்கூடிய பாதையே உயரிய பாதையாக இருக்க முடியும்.பௌத்தம் அத்தகைய பாதையாக இருப்பின் அதனை நாம் மதிக்கவும்,பின்பற்றவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.இருப்பினும் இங்கு பிரச்சனைகள் என்னவெனில்,எது உயரிய பாதை என்பதை கண்டறிவதேயாகும்!விடுதலை வேண்டும் எனில் அப்படி கண்டறியும் அந்த உரிய பாதையை பின்பற்றுவதே சரியானதாக இருக்க முடியும்.
உலகில் நாம் ஏதேனும் ஆசிரியர்,தத்துவவாதி அல்லது சித்தாந்தவாதிகளை அறிய நேரும்போது உற்பத்தி உறவுகள் (உழைப்புசார் உறவுகள்),சொத்துடைமை,செல்வம் மற்றும் ஏழ்மை குறித்தெல்லாம் அவர்களின் போதனைகள் என்ன கூறுகின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.அவர்கள் எந்த மக்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதை அதன் மூலம் கண்டறிய வேண்டும்.இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால்,சமூகத்தில் நாம் எதையும் புரிந்து கொள்ள முடியாது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.
ஒரு ஆசிரியர் அல்லது தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை எடுத்துக்கொண்டு,தவறானவற்றை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.சரியையும் தவறையும் ஒன்று போல் பாவிக்க தேவையில்லை.அது காதலோ அல்லது மரியாதையோ,எதையும் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.