நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்
தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீன தொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களால் குறியிட்ட இந்நாரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக்கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொன்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்ட்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைப்படங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள் வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள் உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன.