நடைவண்டி நாள்கள் :
பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.
நான் குளித்த அடையாளத்தை நதி மறைத்துவிட்டதைப் போல பல பாடல்கள் கால வெள்ளத்தில் கரைந்தே போகும் என அறிவேன். ஆனாலும், காவிரி பொய்த்துப்போன இருபது ஆண்டுகளில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் வறுமைக்காகப் பாட்டெழுதிப் பிழைத்தான் என்பதே என் வரலாறாக நாளை மாறக்கூடும். எழுத வேண்டிய செய்திகள் எவ்வளவோ இருக்கின்றன.