நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்?’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.