மார்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய இரண்டாவது நூலான இதில், மக்களின் தேவைகளுக்கான பொருள்கள் பண்ட மாற்று செய்யப்பட்டு வந்த காலத்திலிருந்து, வணிக நோக்கிற்காகப் பொருள்கள் சந்தைச் சரக்குகளாக மாற்றப்பட்டுப் பின்னர் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிய சரக்கு உற்பத்து முறை தோன்றிய காலம் வரையிலான வரலாற்று விளக்கங்கள் தரப்படுவதுடன், உபரி உழைப்பு, உபரி மதிப்பு, இலாபம் முதலியன பற்றிய மார்க்ஸியப் பொருளாதாரக் கோட்பாடுகள் எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கப்படுகின்றன. முதலாளிய சமுதாயத்தின் உள்ளார்ந்த முரண்பாடு, தவிர்க்கவியலாதவாறு சோசலிசத்துக்கு வழிவிட்டாக வேண்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை இந்த நூல் எடுத்த்துரைக்கிறது. காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூஉர்த்தி போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.