தன் முதல் சிறுகதை 1998ல் விகடனில் பிரசுரமானதாக மயூரா ரத்தினசாமி தொகுப்பின் முகப்பில் அறிவிக்கிறார். பலரையும் போல வெகுஜன இதழ்களின் வாசிப்பாளராக துவங்கி பிற்பாடாக சிற்றிதழ்களின் சிறுகதை வடிவங்களைக் கண்டு கதையானது முன்னைப்போலவே முடிவுகளைத் தாங்கியிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை என்பதை உணர்ந்தவராகிறார். ஒவ்வொரு கதையும் முடிவிலிருந்து ஒரு நீட்சியை கொண்டதாகவே உள்ளதை கண்டுணரும் சமயம் ஒரு சிறுகதை எழுத்தாளாரக தன்னையே உனர்ந்து கொள்கிறார் மயூரா ரத்தினசாமி. சுழற்சி என்கிற முதல் கதையை வாசிக்கத்துவங்குகையில் அவரது வெகுஜன எழுத்தின் வாசிப்புத்தன்மை அப்படியே அப்பட்டமாக அதில் இருப்பதைக் கண்டு இதை இப்போதைக்கு வாசிக்கலாமா? இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா? என்றே யோசித்தேன். சிறுகதைக்காக கதைக்களன்களை எழுத்தாளனே முடிவு செய்து துவங்குகிறான். அவன் எங்கு முடித்துக் கொள்ள யோசிக்கிறானோ அங்கு முடித்து வைத்து விட்டு அவ்வளவுதான் என்கிறான். இந்தத் தொகுப்பில் விகடனில் வெளியான கதைகள் அனைத்தும் எதற்காக கடைசி வரிசைக்குச் சென்றன? என்ற கேள்வியும் இருந்தது எனக்கு. விகடனில் இம்மாதிரியான கதைகள் இப்போது வெளிவருவதில்லை என்பதே இப்போதைய நிலைமை. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெகுஜன இதழ்களும் சிறுகதைகளில் முற்றும் சொல்லும் கதைகளை நிராகரிக்கின்றன. பச்சைக்கண்ணாடி என்கிற கதை குழந்தைகளின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. சித்தப்பனின் கண்ணாடி உடைந்ததற்காக கன்னத்தில் அடித்த சித்தப்பனை வெறுப்பாய் குழந்தை பார்ப்பதில்லை. ஆனால் அண்ணி சுடுசொற்களைக் கூறி கதை சொல்பவனின் மனதை நோகடிக்கிறாள். குழந்தை தன்னுடைய உடையாத கலர் கண்ணாடியை சித்தப்பனுக்கு தருகிறது. விகடனில் இவர் எழுதிய கதைகளனைத்தும் வாழ்வியல் கதைகள். இதைப்போலவே காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை ஊடல்களை மிக அழகாக, பூட்டைத் தொலைத்து விடு கதை வாயிலாக சொல்கிறார். வெயிலைக் கொண்டு வாருங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி. வானசஞ்சாரக்கதை என்று அத்தொகுப்பின் முதல்கதையை வாசித்த பிரமிப்பில் இவரும் அதைப்போன்றே எழுத முயற்சித்திருக்கிறார். இதை, போலச் செய்தல் என்றே குறிப்பிடுகிறார். போலச் செய்தல் தவறில்லை என்றாலும் எந்த சுவாரஸ்யமும் இன்றி இது நீள்கதையாகி வாசகனுக்கு சலிப்பைத் தருமாறு அமைந்து விட்டது. இம்மாதிரியான முயற்சிகளை மயூரா ரத்தினசாமி தவிர்த்தல் நலம் என்றே படுகிறது. மீண்டும் வருவார் தொகுப்பில் கடவுள் எழுந்தருளியதைப் பற்றி கதை பேசும் பகடி எழுத்து. இன்னமும் வேடிக்கை பலவற்றை சேர்த்திருக்கலாம். பல்லி வேட்டை இவரது மாற்று கதை சொல்லல் வடிவத்திற்கான முயற்சியாக கொள்ளலாம். வாசிக்க உகந்த கதைகளை தாங்கிய தொகுப்பாக மயூரா ரத்தினசாமியின் முதல் தொகுப்பு இருக்கிறது.