மிக அருகில் கடல்
விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்தேன் கரீபியக் கடலின் அலை ஒன்று குழந்தை போல் தவழ்ந்து வந்து காலைத் தொட்டது. அந்நிய நகரத்தின் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்குள் காற்றில் பேய் போல் தலை விரித்தாடின கடலோர தென்னந்தோப்புகள் குளிரூட்டப்பட்ட அறைக்குள் மணல் பரப்பில் கழற்றி விடப்பட்ட பூட்சுகளைக் கடலுக்குக் கவர்ந்திழுத்துச் சென்றன அலைகள் மறுபடி கரை தொட்ட கண்ணாடி அலைகள் பூட்சுகளைக் கரை சேர்த்தபோது அதற்குள் இரண்டு ஊதா நண்டுகள் வெள்ளை வெளேரென்ற என் படுக்கை விரிப்பைத் தேடி வந்தன இப்போது கடலோரப் பாறைகளை உப்புக் காற்றின் உளி கொண்டு செதுக்கியது கடல். கடல் செதுக்கிய சிற்பத்தில் பாண்டிச்சேரியிலிருந்து கொதுலுப்புக்குக் கப்பல் ஏறி வந்த கரும்புத் தோட்டத்து கூலி அடிமையின் முக ஜாடை திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் பொருத்தினேன். கடல் தன் ஞாபகார்த்தமாக சங்கு ஒன்றை தரை விரிப்பின் மேல் கிடத்தியிருந்தது.