மகளுக்குச் சொன்ன கதை
பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் மேன்மைகளையும் குறித்துப் பேசுபவை.
வாசிப்பின் முடிவில் மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் நல்லியல்பைத் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு நொடி நெகிழ்ச்சியை, அதிகபட்சம் ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டுசேர்க்கும் பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சிலாகிப்பைக் கோரி இழைத்து இழைத்து ‘செய்யப்படும்’ கவிதைகளைக் காட்டிலும், அக்கணச் சிலிர்ப்பில் மலர்ந்த இயல்பின் வரிகளை நேசிப்பவர்களுக்கு பிருந்தாவின் கவிதைகள் பிடிக்கும்.
--- தமிழ்நதி