கோட்டைவீடு
ஒவ்வொரு மனிதனின் அடி மனிதனுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய், ஆழம் புதைந்து கிடக்கும் உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு மனிதனுகுள்ளும், ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
அவ்வாறு தேர்வாகிற புள்ளியில் நகர்ந்து செல்கிறது அவனுக்கான வாழ்க்கை. ஆனாலும் விடுபட்ட புள்ளியிலேயே எல்லோரது கவனமும் குவிந்து கிடக்கும். அதன்பால் ஒரு குற்ற உணர்ச்சி ஏறி நிற்கும். அந்தப் புள்ளியினைக் கண்டு, அதனைத் தூண்டி சமநிலைப்படுத்தலே எழுத்தாளரின் கடமை எனக் கருதுகிறேன். இதில் நானும் ஒரு புள்ளியினைத் தூண்டி இருக்கிறேன். ஒவ்வொருவரது மனதிலும் இருக்கிற கோட்டை வீட்டிற்கு இந்நாவல் உங்களை அழைத்துச் செல்லும்.
இந்நாவலை நீங்கள் எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம். ஏனெனில், இது கதை மட்டுமல்ல வாழ்க்கை.