தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.