இன்னும் வராத சேதி
1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது. ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர், பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்போதே ‘புதுசு’ சஞ்சிகையில் அவரது சில கவிதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். 1986இல் வெளிவந்த ‘சொல்லாத சேதிகள்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அவரது கவிதைகள் அவரது தனித்துவ அடையாளத்தைக் காட்டுவன. அவர் அதிகம் எழுதவில்லை. காலம் பிந்தியாவது அவரது கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
ஊர்வசியின் கவிதைகள் யுத்தத்தின் பிரசவங்கள்தான். யுத்தத்தின் வலி அவற்றில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. “இரண்டு சிட்டுக் குருவிகளை இங்கே அனுப்பேன், அல்லது இரண்டு வண்ணத்துப்பூச்சிகளையாவது” என்ற அவரது குரல் நம் எல்லோரதும் குரல்தான். அது எப்போதும் நமக்குள் ஒலிக்க வேண்டிய குரல்.
---- எம்.ஏ. நுஃமான்