இலக்கண நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள்
தொல்காப்பிய பேரிலக்கணம், சங்கச் செவ்வியல் பனுவல்கள், திருக்குறல் முதலிய அற நூல்கள், சிலப்பதிகாரம் மணிமேகலை என இவை தமிழ்ச் சமூகத்தின் தொன்மையையும் தனித்துவத்தையும் அடையாளப்படுத்தி நிற்பதோடு தமிழுக்குச் செவ்வியல் தகுதியையும் பெற்றுத்தந்துள்ளன. தமிழின் பழமையான இவ்விலக்கண இலக்கியங்கள் தமிழ் புலமையுலகால் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் உருவான பல்வேறு அறிவுத்துறைகளின் துணையோடு இவ்விலக்கிய இலக்கணங்கள் பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வெவ்வேறு விதமாகப் பொருள்படுத்தப்படுகின்றன. எனினும் வீரியமிக்க இப்பனுவல்களின் முழுவீச்சு இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. பல்வேறுவிதமான ஆய்வுகளும் உரையாடல்களும் இவ்விலக்கண இலக்கியங்கள்மீது கட்டமைக்கப்பட்டு வருகின்றன.