மைசூர் புலி என்றும் மாவீரன் எனவும் வரலாற்றில் வீரமாக நிலைத்த பெயர், திப்பு சுல்தான். இந்திய தேசம், வீரத்தின் சின்னமாக இன்னமும் திகழ்ந்து வருவதற்கு திப்பு சுல்தான் போன்ற மாவீரர்கள் அன்னிய ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்ததே காரணம். இந்தியாவின் இயற்கை வளங்களான அகில், சந்தனம், மிளகு, ஏலம், லவங்கம் ஆகியவற்றின் மீது தீராத மோகம் கொண்ட ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கான கடல் மார்க்கத்தைக் கண்டறிந்தனர். போர்ச்சுகல் நாட்டின் மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவுக்குப் புதிய கடல் வழியைக் கண்டறிந்தான். கேரளத்தில் உள்ள கோழிக்கோடு எனப்படும் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கி வியாபாரம் என்ற பெயரில் தனது கடையை விரித்தான். டச்சுக்காரர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், இவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைந்தார்கள். ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் பெயரால் இங்கே அரசியல் நடத்தினர். நாடு பிடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசர்களை தங்களது சதித் திட்டத்தால் வெல்ல முயன்றனர். சில அரசர்கள் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர். சில அரசுகள் அந்நியரை எதிர்த்துப் போரிட்டன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென்னிந்தியாவில் பெரும் பகுதிகளைப் போரிட்டு வென்ற ஹைதர் அலியையும், அவரது மகன் திப்பு சுல்தானையும் வெல்ல ஆங்கிலேயர்கள் செய்த சதிகள் எத்தனை, எத்தனை? மாவீரன் திப்புசுல்தான் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட வீரம் எத்தகையது? இந்த நூலில் விவரிக்கிறார் டி.கே.இரவீந்திரன். திப்பு சுல்தானுக்கு ‘நசீப் உத்தௌலா’ என்ற ஒரு பட்டம் இருக்கிறது. நசீப் உத்தௌலா என்றால் நாட்டின் அதிர்ஷ்டம் என்று பொருள். ஆம், தாய்த் திருநாட்டின் அதிர்ஷ்டமாகத் திகழ்ந்த திப்பு சுல்தானின் வீரத்தையும், தீரத்தையும் இளைய சமுதாயத்தினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நூல். வாசித்துப் பாருங்கள்! திப்புவின் தீரத்தை உணர்வீர்கள்