யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை. இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.