சூடிய பூ சூடற்க :
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிக்கின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது. காட்சிகள் மாறுகின்றன. முகங்களும் மாறுகின்றன. நிலமும் நீள்விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல் நடந்தபடியே இருக்கிறது. அந்தக் குரல் மட்டும் தன் கதியில் இருந்தபடி நடுவாண்மை பிசகாது எவர்க்கும் அஞ்சாது யாவற்றையும் உரசிப் பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்கிறது. மெல்ல மெல்ல அந்தக் கதைசொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது.
- எம்.கோபாலகிருஷ்ணன்