நான் சிவாஜியின் நடிப்பை இரசித்தவன்.சிவாஜியைப் போன்று எந்தப் பாத்திரத்திலும் நடிக்கும் ஆற்றல் உலகில் எந்த நடிகருக்கும் இல்லை என்று அழுத்தமாக நம்பக்கூடியவன்.சிவாஜி ஏற்ற சில பாத்திரங்களால் தேசப்பற்று வளர்ந்தது.சிவாஜியின் உச்சரிப்பில் தமிழ் பாமரர் நாவிலும் நலமாக நடைபயின்றது.சிவாஜியின் பல படங்களால் உறவுகளின் மேன்மை உணரப்பட்டது.அதனால் அந்த மகா கலைஞனை நான் புகழ்ந்திருக்கிறேன்.சிவாஜியைப் புகழ்ந்ததாலே,சினிமாவைப் பற்றி எழுதியதாலோ என் தலையை அலங்கரித்த மகுடம் இன்றும் தரையில் விழுந்துவிடவில்லை.
இந்நூலை நான் எழுதியதற்கு ஓர் அடிப்படை நோக்கம் உண்டு.சென்ற காலங்களில் வந்த நல்ல படங்களை இன்றைய இளைஞர்கள் விரும்பிப் பார்க்க வேண்டும்.அவற்றின் கதையமைப்பில் காட்சிப்படுத்தப்படும் குடும்ப உறவுகள்,நட்பு,அன்பு,பாசம்,காதல் என்னும் உள்ளத்து உணர்வுகள் இன்றைய தலைமுறையின் இதயங்களில் இடம்பெறச் செய்யவேண்டும்.அன்றைய படங்களின் நல்ல பாடல்களில் உள்ள கருத்துகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம்.