ரே எனும் சினிமா கலைஞனை, கடவுளாக்கி வீரவழிபாடு செய்யும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. இந்திய சினிமாவின் மனச்சாட்சியாக இயங்கி வரும் புது சினிமா'வின் முன்னோடி என்கிற விதத்தில் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாகப் போய் நாளாகியும் விட்டது.
இன்றைய தமிழ் சினிமாவின் புதிய எல்லைகள், அவற்றை விரிவாக்க முயலும் இளம் இயக்குனர்கள் என்று வளர்ந்து கொண்டு போகிற போக்கில் சத்யஜித் ரே பற்றி அறிவது இன்றைய தேவை.
ஆட்டமும் பாட்டுமாக மலினப்பட்டுப் போன இந்திய சினிமா சந்தையிலிருந்து விலகி, முதலும் கடைசியுமாக தான் ஒரு கலைஞனாகத்தான் இருப்பேன் என்று அவர் எடுத்த முடிவும் அதை அவர் செயல்படுத்திய முனைப்பும் நாம் பயின்று கொள்ள வேண்டிய பாடங்கள்.