தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி
‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத். தனிமை, புறக்கணிப்பு, மனப்பிறழ்வு, ஆண் உலகச் சீண்டல் ஆகியவை அவரைத் தற்கொலையின் காதலியாக்கியது. எனினும் மரணத்துள் வாழ்ந்ததன் மூலம் உருவான தனது கவிதைகளில் மரணத்தையே வென்று வாழ்கிறார் அவர். பெண் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சில்வியா பிளாத்தின் படைப்புகள் - குறிப்பாகக் கவிதைகள் - அவற்றின் நோக்கிலும் வெளிப்பாட்டிலும் தனித்துவம் நிறைந்தவை. இந்த மொழிபெயர்ப்பு அந்தத் தனித்துவம் குலையாமல் தமிழில் உருமாற்றம் பெற்றிருக்கிறது. சில்வியாவின் ஆங்கிலக் குருதியின் தமிழ்த் துடிப்பு இந்த மொழியாக்கம்.