முதன் முறையாக தி.பரமேசுவரி அறிமுக நாளை நினைவு படுத்துகிறேன். 2009 - ஆம் ஆண்டின் மத்தியில், சென்னையில் பரீகூஷா ஞானி வீட்டுத்
தோட்டத்தில் நடந்த ‘கேணி’ கூட்டத்தில் நான் உரையாற்றிய போது அன்றே எனக்குத் தோன்றியது. ம.பொ.சி.யின் தமிழ் நெருப்பு இன்னும்
அணைந்து போகவில்லை என்று, அதன் பிறகு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
சிலம்புச் செல்வர், மயிலாப்பூர் பொன்னுசாமிக் கிராமணி என்னும் இயற்பெயர் கொண்ட தமிழரசுக் கழக்த் தலைவர் ம்.பொ.சி.யின் மகன்
வயிற்றுப் பேத்தி முனைவர்.தி.பரமேசுவரி, நான் அறிந்தது சரியாக இருந்தால், ம.பொ.சி.யின் ஒரே மகன் திருநாவுக்கரசின் மூத்த மகள் இவர்.
இவர் கீழே இரண்டு தம்பிகள் , இரண்டு தங்கைகள். நோய்ப்பட்டுத் தந்தை இறந்த போது பரமேசுவரிக்கு வயது பதினைந்து இருக்கலாம். சிலம்புச்
செல்வரே இவருக்குத் தந்தையாக , தாத்தாவாக, குருவாக இருந்து வளார்த்திருக்கிறார். அது ஒரு பேறு. தாத்தாவின் போர்க்குணமும் தமிழ்
நேயமும் தன்னலமற்ற இயல்பும் அவருக்கு மரபுவழிச் செல்வங்கள் என்பதைப் பழகிய இந்த நான்காண்டுகளில் அறிந்திருக்கிறேன்.