வாசிப்பே வாழ்க்கையென்று பித்துப் பிடித்து வாழ்ந்த வாழ்க்கையனுபவம் உள்ளோர்க்கு இதில் வியப்பேதும் இருக்க முடியாது. வாசிப்பு என் வாழ்க்கைப் பயணத்தில் தவிர்க்க முடியாததொன்று. இதைச் சொல்வதால், வாசிப்பு மட்டும் தனியே ஒரு பயணம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. வாழ்க்கையே ஒரு பயணம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயணம். என் பயணம் காட்டுவழிப் பயணம். ஒழுங்கோடும் ஒழுங்கற்றும் பரந்தமைந்த அடர்ந்த காட்டுக்குள் வாழும் சின்னஞ்சிறு உயிரிகளில் நானுமொரு உயிரி. எளிய உயிர்களை வாட்டி வதைத்து ஏய்த்துப் பிழைக்கும் வல்லூறுகள் இந்த வனத்திற்குள் நிறைய உண்டு.