வாழ்க்கையை எல்லோருமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்! ஆனால் வாழ்க்கையாக அது இருக்கிறதா என்ற கேள்வியுடனேதான் பெரும்பாலர்க்கு அமைந்துவிடுகிறது. ஆனால் நம்முடனேயே வாழ்ந்து கொண்டு, இதுதான் வாழ்க்கை என்பதை வாழ்ந்துகாட்டும் அர்த்தமுள்ள மனிதர்கள் நிகழ்த்தும் அற்புத வாழ்க்கைதான் இப்பூவுலகில் மானுடப் பிறப்புக்கு பெருஞ்சிறப்பு சேர்த்து வருகிறது.
அப்படிப்பட்ட அற்புத ஒரு வாழ்வு இதோ..எங்கள் தேவகோட்டை மண்னுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு கற்பகத் தருவாம் நீதியரசர் திரு. கற்பகவிநாயகம் அவர்களின் வாழ்வு, அவரது வழித்தடங்களோடும், வாழ்வியல் நடங்களோடும் பதியப்பெற்றுள்ளது.
தன் வாழ்வியல் பயணத்தை மிகுந்த சிரமங்களோடும், போராட்டங்களோடும் துவக்கு, கடலில் தடுமாறும் கலம் போன்ற நிலைமையிலிருந்து, தானே ஒரு கலங்கரை விளக்கமாக மாரியதையும், என்னற்றோர் வாழ்வில் நீதி எனும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுகின்ற நிலையையும் அழகாகப் போகிற போக்கில் எடுத்துக் காட்டும் நீதியரசரின் இந்தப் பயணம் கடும் பயணம் என்பதையும் சுடும் பயணம் என்பதையும் உணரமுடிகிறது.
நீதியரசராக இவர் அமர்ந்தப்பின் வழங்கிய தீர்ப்புகள், வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தன என்பதை எம்.எல்.ஏ.ஒருவருக்கு தண்டனையாக, சத்திய சோதனை நூலைப் படிக்க காந்தி ஆசிரமத்துக்குச் செல்ல வைத்ததாகட்டும் ... நடிகை ஒருவருக்கு தொண்டு அமைப்பில் ஒருநாள் சேவை செய்ய வைத்ததாகட்டும்... ஜார்கண்ட் மாநில ஆளுங்கட்சி அறிவித்த முழுக் கடையடைப்பை அவர்கள்ளே வாபஸ் வாங்க வைத்ததாகட்டும்... அதிரடியும் சரவெடியுமாக இருக்கின்றன தீர்ப்புகள்.