எச்சரிக்கை : இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள்
நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற்றுவிடுவார்; அவர் தமிழ்ப் பண்பாட்டையே அழித்துவிடுவார் என்றெல்லாம் மிகக் கடுமையான பிரசாரம் எல்லாத் தளங்களிலும் அவிழ்த்துவிடப்பட்டது. தமிழ்நாட்டின் சில முக்கிய ஊடகக் குடும்பங்கள் இதில் முன்னணியில் நின்றன.
*இந்தப் பிரிவினைவாத நச்சூற்றுப் பிரசாரத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டில் ஒரு நல்ல குரல் எழும்பாதா என பாரத தேசத்தின் நன்மையிலும் தமிழ் நாட்டின் நலத்திலும் அக்கறை உள்ளவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தார்கள். அப்போது மாரிதாஸ் சற்றும் தயங்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் மோதிக்கு எதிரான பிரசாரப் பொய்களை அடித்து நொறுக்கினார். உணர்ச்சியையும் அறிவையும் தரவுகளையும் சரியான விகிதங்களில் கலந்து அவர் கொடுத்த வாதங்கள் இடதுசாரிகளைப் பயந்து நடுங்கவைத்தன. அவர்களின் பிரசாரப் பதுங்கு குழிகளில் பாய்ந்து ஒடுங்கவைத்தன.
*அர்பன் நக்சல்களின் போராட்டங்களைப் பற்றிய இந்த நூலில் மாரிதாஸ் ஐந்து தலைப்புகளில் இந்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட பொய்ப் பிரசாரங்களை அலசுகிறார்: போராட்டங்கள், போராளிகள், செய்தி-ஊடகங்களும் சமூக வலைததளங்களும், தூய மதவாதம்-தூய ஜாதிவாதம், இளைஞர்களும் தேசநலனும். குறிப்பாகப் போலிப் போராளிகள், போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னால் இந்திய எதிர்ப்பு, வளர்ச்சித் திட்ட எதிர்ப்பு ஆகிய இலக்குகள் இருப்பதையும் இவர்களுக்குப் பின்னால் இந்தியாவை சர்வதேச அரங்கில் பொருளாதாரத்தில் தோற்கடிக்க விரும்பும் சக்திகள் இருப்பதையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் மாரிதாஸ்.
*இந்திய எதிர்ப்பு, இந்து வெறுப்பு சக்திகளுக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் முக்கியமான உண்மையின் உரத்த குரல் மாரிதாஸ். அவர் ஒரு தனிமனிதரல்ல. அவர் இன்றைய தமிழகத்தின் கட்டாயத் தேவை.