எம்.ஜி.ஆர் மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. என்றாலும் அவர் திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் குறையவில்லை.
அரசியல் துறையில் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் அடங்கவில்லல். எம்.ஜி.ஆர்.மீதான ஈர்ப்பு ஓரங்குலம்கூட விலகவில்லை, ஏன்
என்பது இது இன்றுவரை அவிழ்க்கப்படாத புதிர், பிடிபடாத இரகசியம்.
திரையில் தோன்ற ஒற்றை வாய்ப்பு கிடைக்குமா என்று எம்.ஜி.ஆர் ஏங்கிகொண்டிருந்தது ஒரு காலம். அவருக்காக எல்லா வாய்ப்புகளும் வரிசையாகத்
தவம் கிடந்தது பிற்காலம். அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் பொற்காலம்! இன்னமும் எம்.ஜி.ஆர் ஃபார்முலா
இல்லாமல் ஒருபடத்தைக்கூட வசூல்ரீதியான வெற்றிப்படப் பட்டியலில் சேர்க்கமுடியாது.
அரசியலில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். அந்தக் கணிப்பைப் பொய்யாக்கி அரசியலில் இறங்கி,
ஆட்சியையே பிடித்தார் எம்.ஜி.ஆர். இதுவெல்லாம் தற்காலிக வெற்றிதான் என்று அலுக்காமல் ஆருடம் சொன்னார்கள். அதையும் அடித்து நொறுக்கி
பத்தாண்டுகள் பரவசமூட்டும் ஆட்சியைக் கொடுத்தார்.