லக்ஷ்மி சரவணகுமாரின் 2017 வரையிலான ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. லக்ஷ்மி சரவணகுமாரது கதைகளின் உலகம் வரையறுக்கமுடியாதது. சொல்லில் அடங்காதது. வாழ்பனுபவத்தின் பல்வேறு விதங்களை மிக விரிவாகப் பதிவு செய்யும் தன்மை உடையவை இவரது கதைகள். யதார்த்தமான மனிதர்களும், நம் பார்வையில் வேறுபட்டவர்கள் என்று நாம் கருதும் மனிதர்களும் கலந்து வரும் கதைகள் நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது. வெற்று அதிர்ச்சி மதிப்பீட்டுகளுக்காக எழுதப்படும் கதைகளிலிருந்து விலகி, உண்மையான அனுபவத்தின் வாயிலாகத் தான் கண்ட வாழ்க்கையை, உலகத்தை, மனிதர்களை நம்முன் நிறுத்துகிறார் லஷ்மி சரவணகுமார். அவர்கள் நம்மோடு பேசுகிறார்கள். உண்மையில் குற்றச்சாட்டுடன் கூடிய நீண்ட விவாதத்தைக் கோருகிறார்கள். இத்தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகளுமே, அவை முடியும் இடத்திலிருந்து பெரியதொரு விவாதத்தை நமக்குள் நிகழ்த்தத் துவங்குகின்றன. அந்த விவாதம் வாழ்க்கை சார்ந்ததாக இருக்கலாம், உடல் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது நம் தோல்விகள் பற்றியதாகவும் இருக்கக்கூடும். இருள்வெளிகளும் அவற்றின் இடையே தெரியும் வெளிச்சப்புள்ளிகளும் கூடிய கதாபாத்திரங்களின் பயணத்தில் நாமும் கலந்திருக்கிறோம்.