கோவை கலவரத்தில் எனது சாட்சியம்.
இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100.
போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்பு நடைபெற்ற வெறியாட்டத்தின் பின்பும் கோவையில் குண்டு வெடிப்பிற்குப் பிறகும் களப்பணி செய்தவர்
கோவை கலவரம், அதற்கு முன்பிருந்த சூழல், ஊதி பெருக்கப்பட்ட பகைமை உணர்ச்சி, காவல் துறையில் ஊடுறுவிய காக்கிகள் போன்ற பல விஷயங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். அவற்றையெல்லாம் இவர் உறுதி செய்கிறார்.
இந்த நூலில் சொல்லப்பட்ட மூன்று முக்கியமான விஷயங்கள் நான் அறியாதவை. எனவே எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது.
இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை. ஒரு இந்து போலீஸ்காரரை கொலை செய்தததற்கு பழி வாங்கவே இந்து முன்னணி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்பதுதான் இதுவரை நாம் அறிந்த செய்தி.
கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் செல்வராஜ் இந்து அல்ல, அவரது முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ். ஆக ஒரு இந்துவின் கொலைக்காக இந்து முன்னணி களமிரங்கவில்லை. ஏற்கனவே உள்ள பகைக்கு கணக்கு தீர்க்கவே இக்கொலையை காரணமாக்கியது. கலவரம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அப்போது கோவை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துகிறார். முஸ்லீம் காவலர்களை வெளியே போகச் சொல்லி விட்டு நடந்த கூட்டத்தில் காவல்துறை அல்லாத ஒரு மனிதர் கலந்து கொண்டு போலீஸை வெறியூற்றுகிறார். அந்த மனிதர் யார் தெரியுமா? வீரத்துறவியார் என்று அழைக்கப்படுகிற ராம.கோபாலன். காவல்துறை கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை?
முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது. அழிவு வேலை ஆரம்பிக்கிறது. மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.
கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.
ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.
ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.
வன்முறையும் அப்பாவி மக்களைக் கொன்றதும் இஸ்லாத்திற்கே முரணானது என்பதை பல இடங்களில் அழுத்தமாக சொல்கிறார் நாசர். கோவை கலவரம் தொடர்பான ஒரு உண்மையான ஆவணாக இந்நூலை பார்க்கிறேன். இந்த நூலை கொண்டு வந்ததற்கும் இன்னொரு கலவரம் நிகழ்வதை தடுத்ததில் ஆற்றிய பங்கிற்கும் (நூலை வாங்கி விபரங்களை அறிந்து கொள்ளுங்களேன்) திரு ஏ.வி.அப்துல் நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.