கொல்லனின் ஆறு பெண்மக்கள்
எத்தனையோ காலத்துக்கு ஆட்டுமணி கிணுகிணுக்கும் ஒலிகளை சுருட்டி வந்த காற்று பாட்டி படுத்திருந்த ஓட்டு வீட்டு தாழ்வாரத்திருணையில் துயரமாக வீசியது. ஆனாலும் கண்பத்தாத பாட்டியின் கருவிழி ஆழத்தில் உலர்ந்த எலும்புகளின் சமவெளி எரிந்து கொண்டிருந்தது. வெள்ளெருக்கான பகல்களில் எத்தனையோ காட்டு மனங்கொள்ளும் இருப்பைக் கொண்ட உலர்ந்த காற்றில் பாட்டி தன் காலமெல்லாம் நடமாடுகிறாள். பாட்டியின் இருண்ட கண்ணுக்குள் நூறுவகைப் பயிர் பச்சைகளின் கதை இருந்தது. தானியங்களும் பயறு வகைகளும் என்று பட்டம் பட்டமாய் விளைந்து அறுத்த பயிர் வளர்ந்த கதைதான் அது.