B.R.மகாதேவன் எழுதியுள்ள ‘கதை,திரைக்கதை,வசனம்’ என்ற இந்த புத்தகம் திரைக்கதை எழுத நினைக்கும் அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது.ஒரு திரைப்படத்தின் ஆதாரக்கலை ‘திரைக்கதையே’ என்று ஆணித்தரமாக முதல் அத்தியாயத்தில் நமக்கு விளக்கி,அதன் பின்,திரைக்கதை என்றால் என்ன விவரிப்பது மிகவும் அருமை.
இப்புத்தகத்தின் சிறப்பே,நாம் படித்த,கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஆசிரியர் உருவாக்கியுள்ள பல திரைக்கதை சிந்தனைகள்.குறிப்பாக,காலத்தை மாற்றி ராஜீவ் காந்தியின் கொலையை பற்றிய அவரின் புதிய திரைக்கதை முக்கியமாக படிக்க வேண்டிய ஒரு அத்தியாயம்.அதைபோல ‘டைம் மெஷின்’ கான்சப்டை எடுத்துக்கொண்டு எவ்வாறு காந்தியின் கொலையையே தடுத்து இருக்கமுடியும்.பிரிவினையை எப்படி இதமாகச் செய்திருக்கமுடியும் என்ற சிந்தனையில் புனையப்பட்ட திரைக்கதை அருமை.இதே டைம் மெஷின் கான்செப்டில்,விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை நிகழ்வை எவ்வாறு திரைக்கதையாக்கி இருக்கமுடியும் என்று சொல்லியுள்ளது மகாதேவனின் திரைக்கதை உருவாக்கும் ஆளுமைக்குச் சிறந்த உதாரணம்.
திரைக்கதை எழுதுபவர்களுக்கும் சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இந்தப் புத்தகம் மிகவும் பயன் தரக்கூடிய விதத்தில் உள்ளது.குறிப்பாக,திரைக்கதை-இயக்கம் பயிலும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால்,எந்த மாதிரியான தவறுகள் திரைக்கதையில் செய்யக்கூடாது என்பதை அறிந்து சிறப்பாக எழுத முடியும்.