தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார். தாம் கண்ட தெருக்களில் மிகமிக ஓங்கி நிற்கும் சூன்யத்தைப் பற்றிப் பேசுகிறார். தலைக்குமேல் இஷ்ஷென்று பறந்துபோகும் பறவையை ரசிக்கிறார். சந்தடியற்ற தெருக்களில் புலன்கள் கூர்ந்துவிடுவதால் சிறிய மணங்களைக்கூட நுகரமுடிகிறது என்கிறார்.
வெள்ளைக்காரர் ஒருவரிடம் உங்கள் கண் எப்படி இவ்வளவு நீலமாக இருக்கிறது என்று குழந்தைபோல் கேட்கிறார். செக்கோஸ்லவாகியாவில் பனி பொழிவதை லட்சம் தும்பைப் பூக்கள் வெள்ளைவெளேரென்று வெளியே உதிர்ந்துகொண்டிருந் தன என்று கவிதை ஆக்குகிறார். மனிதர்களை, நகரங்களை, சாப்பாட்டை ரசனையோடு வர்ணிக்கிறார். பயண அனுபவத்தை நாவலின் சுவாரஸ்யத்துடன் படைத்து தமிழ் வாசகனுக்கு விருந்தாக்குகிறார் தி.ஜா.