முறைப்படி பதிவு செய்யாத எதுவும் உங்களுக்குச் சொந்தமானதல்ல. உங்கள் நிறுவனத்தின் பெயர், லோகோ, உற்பத்தி செய்யும் பொருள், வழங்கும் சேவை, உருவாக்கிய கலை படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள். காப்புரிமை பெறாத தயாரிப்புகள் காப்பி அடிக்கப்படலாம். கண்டுபிடிப்புகள் களவாடப்படலாம். இதுவரை சம்பாதித்த லாபத்தையும் நல்ல பெயரையும் வாடிக்கையாளர் வட்டத்தையும் நீங்கள் இழக்க நேரிடலாம்.
லாலிபாப் முதல் லேப்டாப் வரை; ஏழுமலையான பிரசாதம் முதல் ஐதராபாத் பிரியாணி வரை; உணவு, உடை, மருந்து என்று நம் வாழ்வில் தொடர்புள்ள அத்தனை பொருள்களும் காப்புரிமை சட்டத்தின் கீழ் வருகின்றன.
காப்புரிமையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணராததால்தான், மஞ்சளையும் வேம்பையும் அந்நிய நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டியிருந்தது. மிகவும் சிரமப்பட்டுதான் அவற்றை மீட்டெடுத்தோம்.
தொழில் நடத்துபவர்கள், வியாபாரிகள், விஞ்ஞானிகள், நூல் வெளியீட்டாளர்கள், திரைப்படத் துறையினர், வடிவமைப்பாளர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் என்று அனைவரும் இந்தச் சட்டங்களைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
நூலாசிரியர் கு.க. சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னிரண்டு ஆண்டு காலமாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி-வருகிறார்.