நம்மை எப்பொழுதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பகற்பொழுதின் கடும் வெயில் போலவும், இரவின் கனத்த மௌனத்தைப் போலவும் கதைகளும் நம்மைத் தழுவியே கிடக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு கணமும் மரத்தின் அசையும் கிளைகளைப் போன்று கதைகளின் அசைவுகளே. நம் கண்களுக்குப் புலப்பட்டும், புலப்படாமலும், உணர்ந்தும் உணரப்படாமலும் கிடக்கும் இக்கதைகளே மனிதர்களின் ஆகச் சிறந்த வாழ்வியல் அனுபவங்கள்.
எளிய மனிதர்களின், எந்த முக்கியத்துவமற்ற நாட்களின் பல பொழுதுகளில் நடக்கும் துயரங்களும், ஏமாற்றங்க்ளும், துரோகங்களும், சந்தோஷங்களும் மு.முருகேஷின் இக்கதைகளினூடாகப் பரவிக் கிடக்கின்றன. கவிதைகளில் கால்த்தடம் பதித்துள்ள மு.முருகேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.