நவீன கால இந்தியாவை ஒன்றிணைக்கும் பல்வேறு இழைகளில் மிகவும் முக்கியமானது திரைப்படம். மொழியால் பிரிந்திருந்தாலும் உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட இந்தியாவின் ஆன்மாவைக் கோடிட்டுக் காட்டும் 26 திரைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜன ஆரண்யா, தி கோர்ட், நாயி நெருலு, தி குட் ரோடு போன்ற கனமான படங்களில் ஆரம்பித்து பி.கே., த்ருஷ்யம் போன்ற வணிக இடைநிலைப் படங்கள்வரை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தமிழ் என ஏழு மொழிகளில் வெளியான படங்களினூடாக இந்தியச் சமூகம் குறித்த சித்திரத்தை இவை தீட்டுகின்றன. திரைப்படத்தின் கதை பற்றிய சிறிய விவரணையாகச் சுருங்காமல், திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பொருளை விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர் சுரேஷ் கண்ணன். இது திரைப்படம் குறித்த பல்வேறு விவாதங்களைப் படிப்பவர்களின் மனத்தில் ஏற்படுத்தும். இத்தொகுப்பில் உள்ள படங்களை ஏற்கெனவே பார்த்தவர்-களை இக்கட்டுரைகள் மீண்டும் புதிய கோணத்தில் பார்க்கும்படிச் செய்யும். பார்க்காதவர்களை இப்புத்தகம் தேடிப் பார்க்கச் செய்யும்.