சராசரி நபர்கள், சமுதாயத்தின் விதிமுறை இலக்கணத்திற்குள்ளும் வரையறைக்குள்ளும் வராத மனிதர்கள், விளிம்புநிலை மக்கள், அழுத்தத்திற்கு ஆளாகும் பலநிலைப்பட்ட பெண்கள் என இவர்களின் வாழ்வையும் உணர்வையும் ஆழ்ந்த நுணுகிய மொழியில் பேசுகின்றன கலைச்செல்வியின் கதைகள். எதிர்பாராது ஏற்படும் சூழல்களில் சிக்குண்டு அவை தீர்மானிக்க, நடத்தையையும் வாழ்வையும் வடிவமைத்துக் கொள்ளும் இம்மாந்தர்களை உயிர்ப்புடன் நடமாட விடுகின்றார்.
கசடுகள் நிரம்பிய மனம், மென்மையும் பேரன்புமே வன்மையாக வருத்தும் சூழல்கள், தடுமாற்றமும் ஊசலாட்டமுமாகக் கைமீறிச் செல்லும் உணர்வுகள் தரும் குற்றவுணர்ச்சி, மெய்ஞ்ஞான விசாரணை, மானுடத்தின் பரிணாமமும் பலவிதமான பரிமாணமும் என இவற்றினூடாக வாழும் மனிதர்கள் யதார்த்தத்தின் ஒரு கதுப்பினைச் சுவைக்கக் கொடுக்கின்றனர்.