மய்யக் கதை
நிர்வாணம் மீது நிலவு தனது ஒளியை பாய்ச்சி நீர்மேல் நிற்கலாயிற்று. குளத்தின் மையத்தில் அமையாள் கிழவி பிறந்த மேனியாக மல்லாக்க நீந்திக்கொண்டிருந்தார். அப்போது பெரிய பள்ளன் குளத்தில் கார்த்திகை மாதச் சாமமாயிருந்தது.
அமையாள் கிழவியின் முகம் நிலவைப் பார்த்திருக்க அவளது கைகள் மீனின் செட்டைகள் போல் மெதுவாக அசைந்துக்கொண்டிருக்க அவளது கால்கள் மச்சத்தின் வாற்பகுதி போல நீரை அனிச்சையில் அணைந்துகொண்டிருக்க கிழவியின் வற்றிக் கிடந்த சரீரம் குளத்துத் தண்ணீரின் மீது சருகு போல மிதந்தது. அவரது கூந்தல் அவரின் நிர்வாணத்தை ஏந்திப்பிடித்து நீரில் வெள்ளைத் தோகையாய் விரிந்துக் கிடக்க, அம்மையாள் கிழவியின் முலைகள் சுரந்த திரவம் குளத்தில் படலமாய் மிதந்தது. அடர்ந்தும் நரையேறியும் கிடந்த உரோமங்களின் நடுவே அமையாள் கிழவியின் யோனிவாசல் திறந்திருந்ததை நிலவு கண்டது. அப்போது ‘அம்மா’ என்றொரு ஓலத்தைஇ நிலவு கேட்டது. அந்த ஓலம் சாவின் ஓலமென நிலவு அறிந்தது. அது தனது ஒளியை எடுத்துக் கொண்டு சாவை நொக்கி நகரலாயிற்று.