யானை சவாரி
குழந்தைகள் முகத்தில் தெரியும் பூரிப்பையும் பரவசத்தையும் பார்க்கப்பார்க்க என் மனம் விம்மும். சிரிப்பும் வேகமும் பொங்க அவர்கள் பேசுவதையும் பொருளற்ற சொற்களைக் கூவுவதையும் ஆசையோடு கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்வேன். விதவிதமான உணர்வெழுச்சிகள். விதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம். ஒவ்வொன்றையும் ஓர் இசைத்துணுக்கு என்றே சொல்லவேண்டும். அதிசயமான அந்தத் தாளக்கட்டை ஒருபோதும் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிகளும் அவர்கள் மொழிந்த சொற்களும் தான் இந்தத் தொகுதியில் உள்ள பாடல்களுக்கான ஊற்றுக்கண்கள். குழந்தைகளின் சொற்களை எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் நானே குழந்தையாக மாறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். குழந்தைகளால் குழந்தையாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்கமுடியும்?