வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்பு நிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள்.உரத்துப் பேச இயலாத,மெளனப்படவும் முடியாத,மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை.காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உடைவுகளின்,சிதைவுகளின் பேரோசைகளைக் கேட்க இயலும்.இடிபாடுகளிடையே சிக்கி,நசுங்கி,உயிர் நலிந்து போனோரின் மெலிந்த முனகல்களைக் கேட்க இயலும்.
உஷாதேவியின் இந்த அபூர்வக் கதைகள் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல வரவு.கதைகளில் சில தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஆற்றலுள்ளவை என்பது என் கணிப்பு.எழுத்தாளர் உஷாதேவிக்கு என் நல்வரவு. -பொன்னீலன்