இந்த நாளில் பலர் நம் மகத்தான நாகரிகத்தையும் விஞ்ஞான அற்புதங்களையும் பற்றிச் சொல்லிப் பெருமை பாராட்டலாம். விஞ்ஞானத்தினால் பல
அற்புதங்கள் நிகழ்ந்த்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனாலும் பல துறைகளில் மனிதன் மற்ற பிராணிகளைவிட அப்படி ஒன்றும் அதிகமாக
முன்னேறி விட்டதாகத் தெரியவில்லை. இன்னும் கேட்கப் போனால் சில பிராணிகள், குறிப்பிட்ட சில துறைகளில் மனிதனையும் விடச் சிறந்து
விளங்குகின்றன. நாம் பூச்சி புழுக்களை ஜீவன்களிலெல்லாம் மிகவும் இழிந்தவை என்று எண்ணி வருகிறோம். ஆனாலும், இந்தச் சின்னஞ்சிறு ஜீவன்கள்
கூட்டுறவு என்னும் கலையையும், பொது நன்மைக்காகத் தியாகம் புரியவும் மனிதனைவிடச் சிறப்பாகக் கற்றறிந்திருக்கின்றன. சமுதாய நலனுக்காகப்
பரஸ்பரம் ஒத்துப் போவதும் தியாகம் புரிவதுமே நாகரிகத்தில் தேர்ச்சி பெற்று விளங்குவதை நிர்ணயிப்பதற்குரிய சோதனைகள் என்னும் பட்சத்தில், கறையானும்
எறும்பும் இந்த விஷயத்தில் மனிதனை விடச் சிறந்தவை என்று சொல்லலாம்.