காந்தி
எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்ளாதவர். ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப் படுத்திக்கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளயும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக்கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர். தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் மாற்றம்கொள்ளக் கூடியவன் உயரக்கூடியவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர். இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது......